தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரேஷன் கடை மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யும் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்தில் மீண்டும் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு 3 லட்சம் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ரூ. 700 மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் 2 லிட்டர் சமையல் எண்ணை, சக்கரை 2 கிலோ, 1 கிலோ கடலை பருப்பு, அரை கிலோ ரவை மற்றும் அரை கிலோ மைதா உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இந்த சிறப்புத் தொகுப்பு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும்" என்றார்.